Monday, September 5, 2011

2. நான்


  2. நான்
``ஆத்மா நான் என்று அனுபவம் அடைந்து தன் இயல்பு நிலையை அறியச் செய்யும்’’.
   நான் என்பதை உடலாகவே கருதுகிறோம். நான் பிறக்கும்போது இவ்வுடலை எடுத்துக் கொண்டுள்ளேன். இறக்கும் போது அதை விட்டுவிடப் போகிறேன். இந்த உடல் மாறிக்கொண்டே இருக்கிறது. அதன்பல நிலையிலும் நான் இருக்கிறேன். (குழந்தையாக, இளைஞனாக, வாலிபனாக...) உடலில் உள்ள அணுக்கள் பல சதா இறந்து கொண்டும், இறந்தவற்றைப் புதுப்பித்துக் கொண்டும் இருக்கின்றன. எத்தனை எத்தனை இயக்கங்கள், எதிர் வினைகள் நம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நான் உடலாக ஒன்றி இருப்பதை எப்போதும் உணர்ந்து இருக்கிறோம். இவை நமக்குள் ஆழ்ந்து ஊன்றியுள்ளதால் எப்போதும் எல்லாச் செயல்களின் இடையேயும், விழிப்பு நிலை போன்ற எல்லா நிலைகளிலும் இயல்பாகவே உள்ளது. படித்துக் கொண்டிருந்தாலும், எழுதிக் கொண்டிருந்தாலும் நான் என்னை மறப்பதில்லை. நான் என்ற உணர்வுக்கு ஒரு முனைப்புத் தேவையா? வேண்டாம். கவனத்தைப் பல திசையிலும் சிதறவிட்டவனும்கூட இந்த உணர்வுடன்தான் இருக்கிறான். எனவே இந்த உடல் நானாக இருக்க முடியுமா என்ன? கண்டிப்பாக அல்ல.

       மனதில் இருந்து எண்ண அலைகள் மாறி மாறிச் சதா வந்து கொண்டே இருக்கின்றன. எண்ணற்ற எண்ணங்கள் நாள் முழுவதும் வந்து கொண்டு இருக்கின்றன. இந்தப் பிறப்பில் நமக்கு எவ்வளவு எண்ணங்கள் வந்து கொண்டு இருக்கின்றன எனக் கணக்கிட முடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எண்ணமற்று இருக்கலாம். பயம், கவலை, சினம் போன்ற எண்ணங்களே சுமையாய் இருக்கும்போது, அதைக் குறைக்க விரும்புகிறோம். சிலர் தம் சோகங்களை மற்றவரிடம் சொல்லி இறக்கி வைப்பார்கள். எனவே நிலையற்ற மனம் நானாக இருக்க முடியாது.

    புலன் ஒவ்வொன்றும் அதன் வேலைகளைச் செய்து கொண்டேயிருக்கின்றன. கண்களால் பார்க்கின்றோம். காதுகளால் கேட்கின்றோம். மூக்கினால் மணமறிகின்றோம். நாக்கால் சுவையறிகின்றோம். இந்த ஐந்து ஞானேந்திரியங்களும் பரு உடலில் ஒன்றுபட்டு இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இவை நான் உலகை அறியக் காரணமாகின்றன. இவற்றில் குறை ஏற்பட்டாலோ, ஊனமிருந்தாலோ நான் குறைவில்லையோ! இவை எப்படி நானாக இருக்க முடியும்?

    புத்தி என்பது தீர்மானமாக உள்ள அறிவாகும். சரியோ, தப்போ ஒரு முடிவானதாகவே புத்தியுள்ளது. நிறையப் படித்தவரும், அறிவாளியும்கூட என்ன திறமையிருப்பினும் எவ்வளவு நுண்ணறிவிருந்தாலும், உண்மையை அறிய முடியாமல் மதி குழம்புவார்கள். கற்பனையைத்தான் உண்மை என நினைப்பர். இதுவும் தவறானதாக, மாறுவதாக இருப்பதால் நானில்லை. இது ஒவ்வொருவரிலும் ஒவ்வோரளவில் உள்ளதாலும் முழுமையாகவும், மாறாததுமாக உள்ள நான் புத்தியில்லை.

      பிராணன் என்ற ஒன்று உடல், புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றை இயங்க வைக்கும் ஆற்றலைக் கொடுக்கின்றது. இது இல்லை எனில் உடலில் உள்ள அனைத்து இயக்கங்களும் நின்றுவிடுகின்றன. ஐம்புலன்களையும் இயங்கச் செய்கின்றன. உடல், மனம், புலன்கள், புத்தி இவை இயங்காமல் இருக்கும்போதும் சுவாசம் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. இதன் இயக்கத்தில் பல வகைகள் இருப்பதால் இந்தப் பிராணனும் நானில்லை.

       இவ்வாறு எல்லாவற்றுக்கும் அடிப்படையாய் உள்ளவனல்லவாநான்? உடல், புலன்கள், மனம், புத்தி, பிராணன் எல்லாவற்றுக்கும் உரியவனல்லவா நான்? ஆகவே நான் உடலில்லை. நான் மனம் இல்லை, நான் புத்தி இல்லை. நான் பிராணனில்லை. நான் இவற்றை எல்லாம் உடையவன். இவற்றைக் கொண்டு இந்த உலகில் ஜீவித்திருக்கும் ஜீவன் - அதாவது ஆத்மாவின் ஆத்ம இயல்பு ஆத்மா என்றாலேநான்என்றே பொருளாகும்.
நான் எதுவாக என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அது நான் இல்லை. அதைவிட மிக மேலானவன். அந்த மேன்மையான உனது ஆத்ம இயல்பு. இதன் °வரூபத்தை உனக்கு இயல்புணர்வு உணர்த்துவது உனக்கு ஆனந்தமளிக்கும். உன்னுள் உறைந்திருக்கும் இயல்பை அறியவும். உனது மகத்துவம் பற்றி உணரவும் இந்த `இயல்பு சோதனைஒன்றே வழிவகுக்கும்.

    இதன் மூலமாக நமக்கு பொருட்களைப் பற்றிய மனிதர்களைப் பற்றிய அவர்களிடம் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு பற்றிய செயல்கள் பற்றிய அறிவு கிடைப்பது சாத்தியமாகிறது. முழுமையான வெற்றிகரமான வாழ்க்கை கிடைப்பதும் சாத்தியமாகிறது.
 
          “மனித வடிவில் இயற்கை உருவாக்கியுள்ள இயல்புணர்வால் நானே ஆத்மா என்று அனுபவம் பெற முடியாத மனித வாழ்வு அர்த்தமற்றது.

No comments:

Post a Comment