Monday, September 5, 2011

3. கர்மா


3. கர்மா
``தன்னியல்பை அறியும் போது கர்ம வினைகள் விரைந்து கரைந்து தடைகளை நீக்கி மெய்ப் பொருளை அறியச் செய்யும்’’.

நான் என்ற எண்ணம் அற்று விலகிப் போய் ஜீவன் என உணரப்படுகிறது. இந்த ஜீவன் என்பது கர்மாவும், ஆத்மாவும் இணைந்த ஒன்றாகும்.

இந்தப் பிறப்பு தான் ஆத்ம இயல்பைப் பற்றி அறிய நமக்குக் கிடைத்த அரிய நல்வாய்ப்பாகும். இதனை நாம் நன்கு உணர்ந்துகொண்டு கர்மவினையை நீக்க முயற்சிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். மற்ற ஜீவராசிகள் கர்மவினைக்காகப் பிறப்புகள் எடுக்கின்றன. தேவர்கள்கூடக் கர்மவினையைக் குறைப்பதற்காக இந்தப் பூலோகத்தில் அவதரிக்கின்றனர்.

நம்முடைய உண்மை நிலையை அறியாமல் கர்ம வினையால் பிறவித் துன்பத்தில் மாட்டிக் கொண்டு உழன்று கொண்டு இருக்கின்றோம். நமது அறியாமையால் கர்ம வினையை பிரார்த்தனை செய்து அதிகரித்துக் கொண்டு இருக்கின்றோம். எனக்கு செல்வத்தைக்கொடு, புகழைக்கொடு, பதவியைக்கொடு, பிள்ளையைக் கொடு இதுபோன்று பலவிதமான எண்ணங்களை வைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்கின்றோம். இத்தகைய போகங்களெல்லாம் கர்மாவை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. இந்த வெளியேயுள்ள மாயையால் நம்மை அறியாமல் மேலும் கர்மவினையை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றோம். இவை எல்லாம் சிறிது காலம் சென்றவுடன் அழிந்து விடுபவை.

ஒரே கருத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிந்து கொள்கின்றோம். ஏனெனில் அவரவர் கர்மவினைக்கு ஏற்றவாறு அது அறியப்படுகின்றது. ஒருவன் மிகவும் கஷ்டத்தில் வாடுகின்றான். ஒருவன் சுகபோக நிலையில் வாழுகின்றான். இதற்கு எல்லாம் அவரவர் கர்மவினையே காரணம். நாம் செய்யும் அனைத்துச் செயல்களும் மேலும் கர்மவினையை அதிகரிக்காமல் அதை அனுபவித்துக் குறைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எனவே கர்மவினைக்காக நாம் எதிர்த்துச் செயல்பட வேண்டும். உதாரணத்துக்கு எனக்குப் படிப்பு வரவில்லை எனில் அதற்காக அறிவுசார்ந்து கடினமாகப் படிக்க வேண்டும். நான் குருடன் எனில் கடினமான முறையில் எதிர்த்துப் போராடிக் கர்மவினையைக் குறைக்க வேண்டும். நான் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்கின்றேன் என்றால் நம் கர்மவினையை குறைப்பதற்காக எனக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு என இதை ஏற்று அறிவுசார்ந்து உழைக்க வேண்டும்.

கர்மவினையைக் குறைப்பது அல்லது அதிகரிப்பது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றோம். நாம் செய்கின்ற அனைத்துச் செயல்களும் கர்மாவின் வெளிப்பாடே. வெளிப் பொருள்களின் விஷயத்தில் அதிகமாகக் கவனம் செலுத்தக்கூடாது. ஏனெனில் இவை கர்மவினையை அதிகரிக்கச் செய்கின்றன.

இந்த உலகில் கர்மத்தைக் குறைப்பதுதான் சாலச் சிறந்தது. நாம் ஆத்மாவை அறியும் வரை கர்மத்தை குறைத்துக் கொண்டே இருக்க வேண்டும். கர்மாவைக் குறைக்கும் இந்த முயற்சியில் இடையில் மரணம் ஏற்பட்டால் அடுத்த பிறப்பில் அது தொடரும். எனவே அடுத்தப் பிறப்பிலும் தொடர்ந்து வரும். உடலை விட்டுப் போகும் போது வேறு எதையும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் கர்மா தொடர்ந்து வரும்.

ஜீவன் உண்மையில் பரம்பொருள்தான். அந்த ஜீவன்தான் செய்த கர்மாவின் உடலை அனுபவித்துக் கொள்வதற்காக இந்த மானிடப் பிறப்பை எடுத்துள்ளது. இந்தமானிடப் பிறப்பில் ஜீவன் ஆத்மாவை அறிதலுக்குத்தான் இந்த பூலோகத்தில் நாம் பிறந்துள்ளோம்.

காலை எழுந்தவுடன் நான் இன்றைக்குக் கர்மாவைக் குறைக்க எனக்குக் கொடுத்த வடிவத்தில் முழுநிறைவுடன் செயல்படுவேன் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் செயல்படுத்த வேண்டும்.

இந்த ஜீவனைப் பகுத்தறிந்து கர்மாவை அகற்றி இயல்பை அறியச் செய்வதுதான் அரிதான இந்த மானிடப் பிறப்பின் நோக்கம். விரைந்து கர்மவினையைக் குறைக்க ஆத்ம இயல்பைப் பற்றி நிறைய அறிய வேண்டும்.

``கர்மாவினால் மனிதன் ஆசைகளைக் கொண்டு வாழ்கின்றான். கர்மத்தை அனுபவித்து குறைத்தால் மெய்ச்சிந்தனை ஏற்படும்’’.

No comments:

Post a Comment