Monday, September 5, 2011

4. ஆத்ம இயல்பு அறிவு


4. ஆத்ம இயல்பு அறிவு

``நம் இயல்பை அறிந்து வாழும் வாழ்க்கை விட உயர்நிலை இயல்பை இதன் உண்மையை எல்லோரும் அறிய இயற்கையான இயல்பான அறிவு தான் தேவை’’.

நம் ஆத்மா கர்மாவால் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. அப்போது ஆத்ம இயல்பைப் பற்றி அறிய வாய்ப்பில்லை. உயர்ந்த மானிடப் பிறப்பில் கர்ம வினைகள் குறையும்போது அவனுக்கு இயல்பைப் பற்றிய ஓர் அறிவு ஏற்பட்டு அதில் ஒரு நாட்டம் ஏற்படும். மனம் பக்குவம் அடையும். இந்த நிலை ஒரு நல்ல அறிகுறி. இதை நழுவவிடக் கூடாது. ஆத்ம இயல்பு அறிவுக்கு உரிய உன்னதக் கருத்துகள் அறிந்துகொள்ள வேண்டும்.

நல்ல, தெளிவான அறிவால்தான் ஆத்ம அறிவைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். மெய் நூல்களை ஆழ்ந்து பயின்று பெற்ற அறிவு, விஞ்ஞானம் எனப்படுகிறது. ஆன்மீக மெய்நூல்களின் மையக் கருத்தும் ஆத்ம அறிவை பற்றியுள்ளதாக இருக்கின்றது. இந்த மெய்யறிவினால்தான் அறியாமையின் விளைவிலிருந்து விடுதலை கிடைக்கின்றது. மனிதனின் சிந்தித்தலிருந்து தோன்றியபடி இந்த மனித இயல்பை அறிவதே இயல்பான அறிவாகும்.

மிகச் சிறியதாகவுள்ள பொருள்களை நுட்ப நோக்கியால் மிகத் துல்லியாக அறியலாம். மிகத் தூரத்திலுள்ள பொருள்களைத் தொலைநோக்கியால் அறிய முடிகிறது. இதுபோல ஆன்மீகத்தில் மெய்யுணர்வு கொண்டுதான் ஆத்ம அறிவை அறிய முடியும்.

ஆத்ம அறிவு ஒரே மாதிரி மாறாமல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இதையும் சிலர் ஒப்புக் கொள்ள மறுக்கலாம். ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கலாம். புவி ஈர்ப்பு சக்திக்குப் பொருள்களைத் தன்பால் ஈர்க்கும் சக்தி உள்ளது. நியூட்டன் அருகில் ஆப்பிள் பழம் விழுந்ததைப் பார்த்து உணர்ந்து அவர் நியூட்டன் விதியைக் கண்டுபிடித்தார். அன்றிலிருந்துதானா இந்தச் சக்தி வேலை செய்கிறது? அது அதற்கு முன்பும் மௌனமாக இயங்கிக் கொண்டுதான் இருந்தது. நாம் அதை மறந்தாலும் மறக்காவிட்டாலும் என்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதுபோல ஆத்ம இயல்பைப் பற்றிய கருத்துகள், தத்துவங்கள் ஒரே மாதிரியாக இருந்துகொண்டே இருக்கும். ஆத்ம அறிவின் தத்துவம் மற்றப் பொருள்களைப் போலப் பார்த்து, கேட்டு அறியப்படும் பொருள் அல்ல. ஆத்ம இயல்பு அறிவு புலன்களுக்கு அப்பாற்பட்டது. நுட்பத்தைவிட நுட்பமானது. இதை மெய் அறிவினாலேதான் பெறமுடியும்.

நீருக்குள்ளிருக்கும் மீன் நீர் நிலையின் முழு உருவத்தையும் காண முயற்சிப்பது போல, பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருந்து கொண்டே பிரபஞ்சப் பொருளை மனிதன் அறிய முற்படுவது ஆகும்.

மகான்கள், தீர்க்கதரிசிகள், சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஆத்ம அறிவுக்காக யாத்திரைகள் சென்று தனிமையிலும், காடுகளிலும் சென்று மனத்தையும், புத்தியையும் பண்படுத்தி ஆராய்ந்து அலசிப் பக்குவப்படுத்தி மனமும், ஆன்மாவும் எப்படி இயங்குகின்றன என்று காண உள்முகமாக ஆழ்ந்தார்கள். நீண்டு தொடர்ந்து ஆன்மப் பயிற்சியை மேற்கொண்டனர். அதனைச் செய்து ஆத்ம அறிவைச் சிஷியர்களுக்குக் கற்பித்தார்கள். அவர்கள் அடுத்த பரம்பரைக்கு அந்த உண்மைகளை குரு சிஷியன் மூலம் பாதுகாத்துத் தந்தார்கள். ஆத்ம இயல்பு அறிவு மிகக் கடினமாகத்தான் அறிய முடிந்தது. காலத்தின் வளர்ச்சியால் ஆத்ம அறிவு பற்றிய கருத்துகள் நமக்குப் பல வழிகளில் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன.

ஆத்ம இயல்பு அறிவின் நித்திய பொருள் என்றும் மாறாதது. இன்றைய படித்தவர்கள் உண்மை அறியாமல் விநோதக் கற்பனைகள் என்று பேசலாம். ஆனால் நன்கு ஆராய்ந்து உட்பொருளை உணர்ந்தவர்கள், ஆத்ம தத்துவத்தில் நல்ல நம்பிக்கை கொள்வார்கள். விஞ்ஞானிகளும், புகழ் பெற்றவர்களும், உயர்ந்த நிலையில் உள்ளவர்களும், சா°திரங்களில் சிறந்தவர்களும் மரணம் நெருங்கும் பொழுது அவர்கள் ஒரு சாதாரணமான மனிதனைப் போல் ஆகிவிடுகின்றனர். ஆத்ம அறிவை மேலும் மேலும் அறிவதற்கு முயற்சிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

தன்இயல்பை அறிபவன் ஆத்ம அறிவு அதிகமாக ஆக இந்தப் புற வெளிப்பாடுகள் மனித மனத்திற்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே மனிதன் அகமுகமாகத் திரும்பினால் அவனது இயல்புப் பற்றி கேள்விகள் ஆராய்ச்சிகளால் அவன் தன்னுள்ளேயே ஆத்ம இயல்பை காண்கின்றான்.

நம்முடைய ஆத்ம இயல்பைப் புரிந்து கொள்ளும் போதுதான் மதங்களிடையே மனிதர்களிடையே நிலவுகின்ற சண்டைகளும், பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் மறையும். அது ஓர் நிஜமான அனுபவம்.

ஆத்ம இயல்பறிவு வடிவானவன் என்ற ஒரு விஷயத்தை அறியும்போதும், பல விஷயங்களை அறிய முடியும். இந்த ஆத்ம இயல்பறிவு என்பது எப்போதும் மாறாமல்தான் இருக்கும். ஆத்ம இயல்பறிவை அனுபவத்தில் உணர்வதுதான் சிறப்பு.

ஆத்ம இயல்பறிவினால் மனித வாழ்க்கையை பற்றிய உண்மை அறிவை இயல்புணர்வின் மூலம் அறியமுடியும்.

No comments:

Post a Comment